வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்- இபிஎஸ்
- பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வருக்கு பொறுக்க முடியவில்லை.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்.
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.
அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும்.
பாஜகவுடன் கூட்டணி என்பதை பொறுக்க முடியவில்லை முதல்வர் ஸ்டாலினுக்கு. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை.
ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.
கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம், குடிநீர் வரி, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி என அனைத்தும் உயர்ந்துவிட்டது.
இளைஞர்கள் அதிமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.