தமிழ்நாடு செய்திகள்

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்- விக்கிரமராஜா

Published On 2025-08-11 13:29 IST   |   Update On 2025-08-11 13:29:00 IST
  • தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை.
  • கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறு குறு வணிகர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்துமீறலில் இருந்து சிறு வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும்.

திருச்சியில் 1 லட்சம் சதுரடியில் அமைய உள்ள பெரு நிறுவனத்தின் கட்டிடம் முன்புறம் சிறு வியாபாரிகள் நசுக்கப்படுவதை கண்டித்து வருகிற 30-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த முன்னெடுப்பை அரசுகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு வணிகர்கள் இல்லாமல் போய் விடுவார்கள். பல்பொருட்கள் விற்பனையில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவது உலக மயமாக்கல் கொள்கை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வால்மார்ட் என்ற பெரு நிறுவனத்துக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்திய போது அந்த நிறுவனத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை. கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.

ஆனால் தமிழகத்தில் 35 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். எங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை பெற வேண்டுமானால் தமிழக அரசு எங்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இந்தியாவை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்கள் உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்க முன்வர வேண்டும். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News