தமிழ்நாடு செய்திகள்

சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டார்: இ.பி.எஸ். பற்றி பேச விஜய்க்கு உரிமை இல்லை - வேலுமணி

Published On 2025-08-26 08:30 IST   |   Update On 2025-08-26 08:30:00 IST
  • தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது.
  • அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும்.

மதுரை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி திருமங்கலம் வருவதை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் அங்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், மாணிக்கம், தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேலுமணி பேசும்போது:-

எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் பயணத்தை மேற்கொண்டு சரித்திரம் படைத்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிகளும் எழுச்சி பயணத்தின் மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது. நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை யாரிடம் உள்ளது என்ற வார்த்தையை பேசியுள்ளார். அ.தி.மு.க.வின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவருக்கு தெரியவில்லை. இதை விட பெரிய கூட்டத்துடன் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி பிரஜாராஜியம் என்ற கட்சியை தொடங்கினார். பிரமாண்டமான கூட்டத்தை காண்பித்தார். ஆனால் கட்சியை கலைத்து விட்டார். எடப்பாடி பழனிசாமி பற்றி பேச இவருக்கோ, வேறு யாருக்கும் உரிமை கிடையாது.

அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும். மீண்டும் 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். இதை விஜய் மட்டுமல்ல. யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News