தமிழால், பேச்சாற்றலால் இளைஞர்களிடம் தேசப்பக்தியை விதைத்தவர் - வானதி சீனிவாசன்
- பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்.
- தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட குமரிஅனந்தன் மறைந்தார் என்ற செய்தியறிந்து பெரும் துயரம் அடைந்தேன்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அரசியலில் அடையாளம் காணப்பட்டு, தன் தமிழால், பேச்சாற்றலால் இளைஞர்களிடம் தேசப்பக்தியை விதைத்தவர். தமிழுக்கும், இந்திய தேசியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
குமரிஅனந்தன் அவர்களின் மறைவால் வாடும் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர், பாஜக மூத்த தலைவர் அக்கா டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி...
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.