திண்டிவனம் அருகே சென்டர் மீடியனில் வேன் மோதி 15 பக்தர்கள் படுகாயம்
- வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
- வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம்:
சென்னை பொன்னேரியில் இருந்து 28 பக்தர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வேன் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற அரசு பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று வேன் டிரைவர் எதிர்பாராத விதமாக பிரேக் அடித்ததால் தனியார் பஸ் மீது வேன் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேன் சென்டர் மீடியனில் மோதியதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.