தி.மு.க.விற்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக ம.தி.மு.க. இருக்கும்: வைகோ
- தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம்.
- ம.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.
மதுரை:
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையை காப்பாற்றுவதற்காக ம.தி.மு.க. உண்ணாவிரதம், மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நானே வாதாடினேன். இறுதியாக நீதிபதிகள் நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
எங்கள் இயக்கம் தொடங்கி 31 வருடங்களாகி விட்டது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். தி.மு.க.விற்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக ம.தி.மு.க. உடன் இருக்கும். மதுவை ஒழிக்க வேண்டும் என வாய் அளவு பேசாமல் டாஸ்மாக் கடைகளை சூறையாடி நெருப்பு வைத்தார்கள் எனது தோழர்கள். 2026 தேர்தலில் கூட்டணியாக திராவிட இயக்கத்தை காக்க தி.மு.க.வுடன் உடன்பாடு கொள்கிறோம்.
ம.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம். அ.தி.மு.க. திராவிட இயக்க கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதனால் அதை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரெயில்வே துறையினர் மனிதர்களால் இயக்கப்படும் ரெயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு மின்மயமாக மாற்றி விபத்துக்கள் ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.