தமிழ்நாடு செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தொடர் முயற்சி- வைகோ கண்டனம்

Published On 2025-10-14 14:18 IST   |   Update On 2025-10-14 14:18:00 IST
  • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது.
  • கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News