தமிழ்நாடு செய்திகள்

அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதி துறைகளைப் பாதுகாத்திட புதிய கொள்கை- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2025-08-30 15:26 IST   |   Update On 2025-08-30 15:26:00 IST
  • கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது.
  • எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி கடந்த 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அமெரிக்காவைத் தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகக் கொண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இந்தியா முழுவதும் அது 20 சதவீதம் மட்டுமே. எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.

அமெரிக்க அரசின் இந்த வரி உயர்வுபோல் முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை. இதனால் அனைத்துத் துறைகளின் ஏற்று மதியாளர்களிடமும் அச்சம் நிலவுகிறது. கடும் சுங்கவரி உயர்வுகள் ஏற்கனவே பெறப்பட்ட பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட காரணமாகியுள்ளன. இந்த உயர்வுகள் எங்கள் தயாரிப்புகளை உலகளவில் போட்டியிட முடியாதவையாக மாற்றியுள்ளன.

இந்த கடின சூழ்நிலையில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழ்நாடு அரசு தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாலும், ஒரு மாநில அரசால் செய்யக் கூடியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, மத்திய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாகத் துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். அதிகம் பாதிக்கப்படுபவை துணிநூல், இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொழில் துறைகளே.

இந்தத் துறைகளில் வேலை இழப்பு 13 சதவீதத்திலிருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.

கேள்விக்குறியாகும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 28 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டின் துணிநூல் துறை கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில், துணிநூல் தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள். பல பத்தாண்டுகளாக மக்கள் வாழ்க்கையை மாற்றிய சமூக-பொருளாதாரச் சூழல் இது. திருப்பூரே கடந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியது. ஏற்றுமதியைத் தாண்டி, இந்தத்துறை நிறைய துணைத் தொழில்களை உருவாக்குகிறது – நிறைவு, போக்குவரத்து, பொதியிடல், இயந்திர உற்பத்தி என நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கச் சுங்க வரிகள் துணிநூல் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவலைக்கிடமானது. 50 சதவீத சுங்கவரியில், இந்தத் துறையின் சாத்தியமான இழப்பு ஏறத்தாழ 1.62 பில்லியன் டாலர் வரை இருக்கும் என எங்கள் மதிப்பீடுகள் காட்டுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகள் உடனடியாக ஆபத்தில் உள்ளன.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News