கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி
- கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
- தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.