தமிழ்நாடு செய்திகள்

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவால் அரசியல் கட்சிகள் பாதிக்கப்படுகின்றன- த.வெ.க. ஐகோர்ட்டில் மனு

Published On 2025-07-30 13:44 IST   |   Update On 2025-07-30 13:44:00 IST
  • அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர்.
  • ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மதுரை:

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த முழு அமர்வு, இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதிக்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக தமிழக அரசு ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த உத்தரவின்பேரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக வெற்றிக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கட்சியின் சித்தாந்தம். அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

குறிப்பாக எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Tags:    

Similar News