த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
- விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கரூரில் கடந்த மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாதது, த.வெ.க. கேட்ட இடம் கொடுக்காததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் இந்தியாவைவே உலுக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.