தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணம்

Published On 2025-10-01 20:50 IST   |   Update On 2025-10-01 20:50:00 IST
  • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
  • கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு பயணிக்கிறார்.

அலுவல் பணிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆதவ் அர்ஜூனா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News