'மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்' - ஆம்புலன்ஸ் ஓட்டுநரை இ.பி.எஸ். மிரட்டியது குறித்து பேசிய டி.டி.வி. தினகரன்
- தேர்தல் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
- வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. நிச்சயம் முத்திரை பதிக்கும்.
தஞ்சை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுப்பட்டி பாலு மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார். அவர் பேசியதாவது:-
தேர்தல் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். யாரிடமும் மண்டியிடாத இயக்கம் அ.ம.மு.க. நாம் உண்மையாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால் உறுதியான, சரியான வழியில் நாம் செல்வோம். வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. நிச்சயம் முத்திரை பதிக்கும். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் யார் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக உறுதியாக செயல்படுவோம் என்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரனிடம், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.டி.வி.தினகரன், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.