தமிழ்நாடு செய்திகள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்- 1 கி.மீ. தூரத்திற்கு அணி வகுத்து நின்ற வாகனங்கள்

Published On 2025-10-18 09:55 IST   |   Update On 2025-10-18 09:55:00 IST
  • நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது.
  • போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.

விக்கிரவாண்டி:

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் முதல் செல்ல தொடங்கினர்.

இதனால் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4 மணி முதல் வாகனங்கள் அணிவகுத்து செல்ல தொடங்கியது.

விக்கிரவாண்டி சுங்க சாவடியில் 6 வழிகள் உள்ளது. தற்போது வாகனங்கள் அதிகம் வருவதை தொடர்ந்து சென்னை திருச்சி வழியில் மேலும் 2 வழிகள் திறக்கப்பட்டு 8 வழிகள் வாயிலாக வாகனங்கள் செல்கிறது.

நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது. இன்று காலை சற்று போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றது.

சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதையொட்டி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.

தேவையற்ற மற்ற இடங்களில் சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து விபத்து ஏற்படாத வகையில் பேரிகார்டு வைத்து அடைத்து சாலையில் பாதுகாப்பை ஏற்படுத்தினார்கள்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆங்காங்கே மேம்பால பணிகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் கனரக வாகனங்களை கும்பகோணம் சாலை வழியாக பண்ருட்டி, மடப்பட்டு வழியாக திருச்சி செல்ல மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

இன்று சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக சுங்கசாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News