மாமல்லபுரத்தில் கடல்சார் அருங்காட்சியகம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்
- மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
- தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றலாபயணிகள் இங்கு உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தின் அருகே கடல்சார் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அங்குள்ள பழங்காலத்து நங்கூரம், மிதவை விளக்கு, கப்பல் மாலுமி தளம், பைனாகுலர், உள்ளிட்ட கடல்சார் அறிவியல் கருவிகள் விபரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆவலுடன் பார்த்து வந்தனர்.
இது அறிவியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பராமரிப்பு காரணமாக மறு அறிவிப்பு வரும்வரை இந்த கடல்சார் அருங்காட்சியம் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளநிலையில் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமானோர் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்று நினைத்து செல்லும் போது அதன் கதவுகள் மூடப்பட்டு கிடப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே கடல்சார் அருங்காட்சியத்தில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.