மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்
- எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்னதாக அமித் ஷா சந்தித்து பேசினார்.
- செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதிமுக- பாஜக இடையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியானது. மேலும், பாஜக-வுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் அமித் ஷாவை சந்தித்தபோது கூட்டணி குறித்து பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செங்கோட்டையன் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இவரும் அமித் ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் அதிமுக-வை பிரிக்க செங்கோட்டையன் மூலம் பாஜக ஆபரேசன் தாமரையை தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் முனுமுனுக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி பயணம் பற்றி எதுவும் தெரிவிக்காதது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மவுனம் அனைத்தும் நன்மைக்கே என பதில் அளித்துள்ளார்.