நொறுங்கிய நிலையில் மகளிர் விடியல் பஸ்?- தமிழக அரசு விளக்கம்
- பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
- தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் மகளிர் விடியல் பஸ்சின் நிலை என்று கூறி பின்பக்கம் நொறுங்கிய நிலையில் செல்லும் பஸ்சின் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இது விபத்தில் சிக்கிய பஸ். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டம் சட்டகல்புதூர் செல்லும் மகளிர் விடியல் பஸ்சின் பின்பக்கம் லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, இந்த பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர். வதந்தியை பரப்பவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு இல்லை என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து முதலில் இந்த வீடியோ பகிரப்பட்டதாகவும் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.