தமிழ்நாடு செய்திகள்

TET-ல் கட்டாய தேர்ச்சி: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு- அன்பில் மகேஷ்

Published On 2025-09-11 18:20 IST   |   Update On 2025-09-11 18:20:00 IST
  • இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.

தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News