தமிழ்நாடு செய்திகள்

காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வாருங்கள்: அண்ணாமலை

Published On 2025-08-25 21:58 IST   |   Update On 2025-08-25 21:58:00 IST
  • பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

பாஜக-வை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News