திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
- திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.
அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.
அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.
அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.
தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.