தமிழ்நாடு செய்திகள்

"யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்"- அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்?.. திருமாவளவன் பதில்

Published On 2024-12-06 08:16 IST   |   Update On 2024-12-06 08:16:00 IST
  • மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே!
  • எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!

சென்னை:

சென்னையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பங்கேற்க திருமாவளவன் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மறுப்பு தெரிவித்தது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல்.

ஆதவ் அர்ஜூன் அவர்களின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும்.

இது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.

இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது.

அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின்' ஆசிரியர் இராம் அவர்களும், மும்பையிலிருந்து ஆனந்த்டெல்டும்டே அவர்களும் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. சில மாதங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; ராகுல்காந்தி அவர்களை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன.

அதன்பின்னர், நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்,

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும்.

நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது, "டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது.

இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.

ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது?

அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?

அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது?

மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!

என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்? நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்!

எனவே, விஜயைக் கொண்டே விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். ஒருவேளை நான் அப்படி கூறாவிட்டாலும் கூட அவர்களால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும். இது தான் இன்றைய சமூக - அரசியலின் இயல்நிலை போக்காகும்.

'விஜய் அவர்களைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்' என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும்.

அதன்படி, பொதுமக்கள் நம்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வதே தற்போதைய நமது முதன்மையான கடமை! எனவே, யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! -- பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்! என்று கூறியுள்ளார். 


Full View


Tags:    

Similar News