null
கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்
- இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
- கார்த்திகாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு பொது மக்கள் சூழ பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். குதிரை சாரட்டில் அவரை அமர வைத்து மாலை அணிவித்து மகுடம் சூட்டி, மேலத்தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து திருமாவளவன்வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பஹ்ரைனில் மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இளையோருக்கான (ஆண் மற்றும் பெண்) கபடி விளையாட்டுப் பிரிவில் இந்திய அணி #தங்கப்_பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இளம் மகளிர் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற தங்கை கார்த்திகாவுக்கும் இளம் ஆண்கள் பிரிவில் பங்பேற்ற தம்பி அபினேஷூக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
சற்றுமுன் கார்த்திகாவைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தமிழ்நாடு அரசு இவ்விரு சாதனையாளர்களுக்கும் ரூ.25 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், அவ்விருவருக்கும் தலா ரூ.ஒரு கோடியாக உயர்த்தி வழங்கிட வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.