தமிழகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதில்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு க. ஸ்டாலின்.
- திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8ம் தேதி நாடு திரும்புகிறேன். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில்10.62 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக, 32.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகம் வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதிலாக உள்ளது.
திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ இல்லையோ. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு.
விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அதிகம் பேசமாட்டேன், சொல்வதைவிட செயலில் காட்டுவேன்.
எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் கருத்துக்கணிப்புகளை மிஞ்சி திமுக அமோக வெற்றி பெறும்.
முதல்வராக இருந்தபோது இபிஎஸ் சென்ற வெளிநாட்டு பயணங்களை போல் எனது பயணத்தையும் நினைத்து அவர் விமர்சனம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.