தமிழர்கள் 5350 ஆண்டு பழமையானவர்கள் என ஒப்புக்கொள்வதில் மத்திய அரசுக்கு தயக்கம் ஏன்?: தங்கம் தென்னரசு
- அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது.
- கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது என தெரிவித்தார்.
சென்னை:
கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டி இருக்கின்றன. அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய மந்திரியின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்துவிடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என தெரிவித்துள்ளார்.