அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுய ஆட்சிக்கு எதிரானது- தி.மு.க எம்.பி. என்.ஆர்.இளங்கோவன்
- அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
- உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக வரவேற்பு அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமலாக்கத்துறை (ED) வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
அரசு ஊழியர்கள் ரூ.1 லட்சம் வரை பணம் வைத்திருந்த புகார்களை வைத்துக்கொண்டு டாஸ்மாக்கில் நுழைந்து ED அத்துமீறியுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அமலாக்கத்துறையின் நடவடிக்கை முறையற்றவை, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி இருக்கின்றார்கள், கூட்டாட்சி என்ற அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறி இருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார்கள்.
எனவேதான் உச்ச நீதிமன்றம், நீங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கை மாநில சுய ஆட்சிக்கு எதிரானவை என்பதை ஏற்றுக்கொண்டு தடை வதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
டாஸ்மாக் வழக்கில் EDக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது இந்தியா முழுமைக்குமான உத்தரவு.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடக்கும் ED நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தராகவே டாஸ்மாக் வழக்கு உத்தரவை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.