தமிழ்நாடு செய்திகள்

விவசாய வளர்ச்சி குறைவுக்கு தமிழக அரசே காரணம்- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-04-06 15:18 IST   |   Update On 2025-04-06 15:18:00 IST
  • 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும்.
  • ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2024-25-ம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 சதவீதம், உற்பத்தித்துறை 9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண் துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதார உற்பத்திக்கு, வெறும் 14 சதவீதத்திரை மட்டுமே கொண்ட சேவைத்துறை 53 சதவீத பங்களித்துள்ளது. 26 சதவீதத்தினரைக் கொண்ட உற்பத்தித்துறை 37 சதவீதம் பங்களித்துள்ளது.

ஆனால், 60 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக திகழும் வேளாண்துறை வெறும் 10 சதவீதம் மட்டுமே பங்களித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

2024-25-ம் ஆண்டில் நிலையான விலைமதிப்பின் படி தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.17,23,698 கோடி என்றால், அதில் வேளாண்துறையின் பங்களிப்பு ரூ.1,72,369.8 கோடி மட்டும் தான்.

அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் வேளாண்மையை நம்பியுள்ள நான்கரை கோடி மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38,304 மட்டும் தான்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,29,826 ஆகும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மலைக்கும், மடுவுக்குமானது ஆகும்.

வேளாண்துறை முன்னேற வேண்டுமெனில், ஆண்டுக்கு சராரியாக 4 சதவீத வளர்ச்சி எட்டப்படவேண்டும். ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டால்தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். அதை இலக்கு வைத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண்துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News