தமிழ்நாடு செய்திகள்
null

ஊட்டியில் குவியும் சுற்றுலாப்பயணிகள் - வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

Published On 2025-05-03 10:35 IST   |   Update On 2025-05-03 14:47:00 IST
  • ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
  • கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஊட்டி:

கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் பார்வையாளர்களின் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது. அங்கு அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்தபடி இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர்.

சுற்றுலாப்பயணிகள் திரண்டு வந்திருந்ததால் ஊட்டி சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது.

இதற்கிடையே கோடை சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகள் குவிந்து உள்ளதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை ஜூன் 30-ந்தேதி வரை இருப்பதால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 6,000 வாகனங்களும், வார விடுமுறை நாட்களில் 8,000 வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, மே 1-ந்தேதியில் இருந்து ஒருவழிப்பாதை கடைப்பிடிக்கப்படுவதால் ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர வேண்டும்.

ஆனால் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை காரணமாக அந்த பகுதியில் ஒரு வழிப்பாதை நடைமுறையை கடைப்பிடிக்க முடியாததால், ஒருசில வாகனங்கள் இருவழிப் பாதையில் சென்று வருகின்றன.

இதன் காரணமாக ஊட்டியில் முக்கிய சந்திப்புகளான, 'சேரிங்கிராஸ், மதுவான் சந்திப்பு, குன்னூர் சந்திப்பு, பிங்கர் போஸ்ட் சாலை என்று நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனம் மட்டுமின்றி உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை இரவு வரை தொடர்ந்ததால் அவசரபணிகளுக்கு செல்லமுடியாமல், அனைத்து தரப்பினரும் அவதி அடைந்தனர்.

கோடை சீசனின்போது குறைந்தபட்சம் 250 போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவர். ஆனால் தற்போது 50 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள் கடும் பணிச்சுமைக்கு மத்தியில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டால் மட்டுமே போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News