துணை ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி
- சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
- தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 9-ந் தேதி புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர கவர்னரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியான ஆந்திராவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். 2 பேருமே தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் மாநிலம் வாரியாக தனித்தனியாக சென்று கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அவ்வகையில் சுதர்சன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த சுதர்சன் ரெட்டிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், திருச்சி சிவா, வழக்கறிஞர் வில்சன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் விமான நிலையம் சென்று சுதர்சன் ரெட்டியை வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட சுதர்சன் ரெட்டி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.
இந்நிலையில், நட்சத்திர ஓட்டலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்று சுதர்சன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரினார்
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அந்தந்த கட்சி எம்.பி.க்களும் பங்கேற்கிறார்கள். பின்னர் அங்கு நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.