விஜயை மாணவர்கள் அண்ணா என்று அழைப்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது- வேல்முருகனின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம்
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
- கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சி முதற்கட்டமாக கடந்த 30-ந்தேதி, 2ம் கட்டமாக கடந்த 4ம் தேதி என நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
அப்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேல்முருகனின் இந்த பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்..... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு.
ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன் தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும் தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல .திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.