தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது

Published On 2024-12-16 10:01 IST   |   Update On 2024-12-16 10:01:00 IST
  • ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
  • தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

சென்னை:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர், 'ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபசாரங்கள்' என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த புகார் மனு மீது போலீஸ் கமிஷனர் அருண், சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, சென்னை அழைத்து வந்தனர்.

Tags:    

Similar News