தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 2 நாளில் 20 அடி உயர்வு
- கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வரும் நீர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.
கடந்த 3 நாட்களாக பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வனப்பகுதியில் பெய்த தொடர் மழைக்கு சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 2 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 66.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.75 அடியாக உயர்ந்துள்ளது. 42 கனஅடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.50 அடியாக உள்ளது. 493 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1476 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. 238 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2966 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32 அடியாக உள்ளது. 109 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 34.70 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
பெரியகுளம் 6, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 6, போடி 1.2, கூடலூர் 2.8, பெரியாறு 0.2, தேக்கடி 0.4, சண்முகாநதி 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.