தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் மகளை சேர்த்த நீதிபதி

Published On 2025-06-10 11:47 IST   |   Update On 2025-06-10 12:01:00 IST
  • நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.
  • அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகாசி:

போட்டி நிறைந்த இன்றைய உலகில் ஒருவர் வெற்றியாளராக திகழ்வதற்கு கல்வி இன்றியமையாததாக உள்ளது. ஆண்டுதோறும் மாறி வரும் நவீன கல்வி கற்கும் முறையால் பள்ளிகளும் தரம் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் பல்வேறு வசதிகளையும் சிறப்பு கற்றல் முறைகளையும் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் பிரச்சினையால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளின் தரத்தை மேலும் அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அரசு பள்ளிகளுக்கு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை சில அதிகாரிகளும் பின்பற்றுவதை அவ்வப்போது காண முடிகிறது. ஆங்காங்கே கலெக்டர்கள் முதல் அரசு கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்து உள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது சார்பு நீதிபதி ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்த விஜயபாரதி, சிவகாசி சார்பு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சிவகாசி நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற நீதிபதி விஜயபாரதி தனது மகள் அன்பிற்கினியாளை(7) சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தனபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவியை வரவேற்றனர்.

நீதிபதியே தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளது மற்ற அரசு அதிகாரிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளது. இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News