தமிழ்நாடு செய்திகள்

பயங்கரவாதிகளின் சகோதரி: பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது- தமிமுன் அன்சாரி

Published On 2025-05-14 18:49 IST   |   Update On 2025-05-14 18:49:00 IST
  • ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி என ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷா கூறினார்.
  • கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை என தமிமுன் அன்சாரி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரு பெண் ராணுவ அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இதற்கிடையே, இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராணுவ கர்னலை பயங்கரவாதிகளின் சகோதரி எனப் பேசிய ம.பி. பாஜக மந்திரி குன்வார் விஜய் ஷாவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நமது ராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் உயர் ராணுவ அதிகாரியை இழிவுபடுத்தும் வகையில், அவரை மதத்துடன் தொடர்புப்படுத்தி, எதிரி நாட்டின் மகள் என்று கூறக்கூடிய அளவிற்கு பாஜகவினரின் மனதில் ஃபாசிச பயங்கரவாதம் பரவி இருக்கிறது. தேசப்பற்றை அரசியல் வியாபாரமாக மாற்றுபவர்களுக்கு, கர்னல் சோபியா குரேஷியின் தியாகம் பற்றி பேச தகுதி இல்லை.

என அன்சாரி கூறினார்.

Tags:    

Similar News