தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்கவில்லை- மாநில செயலாளர்

Published On 2025-01-23 12:37 IST   |   Update On 2025-01-23 12:37:00 IST
  • டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
  • எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.

மதுரை:

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்த அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எப்போதும் போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவாகரத்தில் மதப்பிரச்சனை வராத அளவிற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்துவதில் நாங்கள் வரவேற்கிறோம். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏப்ரல் 6-ந் தேதி மதுரையில் நடைபெறும் 24-வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா கண்ணூரில் நடைபெற்ற 23-வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கவில்லை. எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News