கோவில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றது- செல்வப்பெருந்தகை
- தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
- தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.
ஆலய நுழைவு போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றம் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திருக்கிறது.
மதுரை ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்று 86 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில் வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.