கன்னியாகுமரியில் கடும் கடல் சீற்றம் - ராட்சத அலைகள் எழும்புவதால் பொதுமக்கள் அச்சம்
- கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை 42 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் அமாவாசை தினங்களில் கடல் சீற்றமாக காணப்படும். குறிப்பாக ஆனி, ஆடி மாதங்களில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில் அமாவாசையும் நாளை வருகிறது. இதனால் இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாக காணப்பட்டது.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி யது. ராஜாக்கமங்கலம் துறை அருகே புத்தன் துறை பகுதியில் இன்று காலை 3 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அலையின் வேகம் அதிகமாக உள்ளதால் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச்சென்று வருகிறது.புத்தன் துறை பகுதியில் கடற்கரையொட்டி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரை பகுதிகளில் அச்சத்துடன் நின்றனர். சிலர் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். மேற்கு மாவட்ட பகுதிகளான வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதியில் உள்ள தடுப்பு மீது வேகமாக மோதியது. சொத்தவிளை, சங்குத்துறை கடற்கரை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. வழக்கத்தைவிட அலைகள் கடற்கரை யொட்டியுள்ள பகுதி வரை வந்து சென்றன. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடலோர காவல்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்காக வருகை தருவார்கள். எனவே அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.