ஸ்ரீதர் - பென்னிக்ஸ் - ஜெயராஜ்
தந்தை, மகனை போலீசார் தாக்கியதற்கும், எனக்கும் தொடர்பு இல்லை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பிரமாண வாக்குமூலம் தாக்கல்
- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இந்த வழக்கின் அப்ரூவராக மாறுகிறேன் என்று கூறி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஏன் அப்ரூவராக மாற முடிவு செய்தார் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர் சார்பில் 17 பக்கங்களை கொண்ட பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர்தான் அவர்களின் கடையில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து உள்ளனர்.
பின்னர் தந்தை, மகன் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தின்போது அங்கு நான் இல்லை. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த வழக்கில் சாட்சி அளித்தவர்கள், சம்பவத்தின்போது நான் அங்கு இல்லை என்று தெரிவித்து உள்ளனர். எனவே இந்த கொலை வழக்கிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதன் காரணமாக நான் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஸ்ரீதரின் இந்த பிரமாண வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.