பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கிய சசிகலா
- வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.