தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடரும்- போராட்டக்குழு அறிவிப்பு
- தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
- தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இதற்கு முன்பு ஆறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் 7-வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலத்தில் எங்கள் பணியை முதல்வர் பாராட்டினார், இப்போது கேவலமாக தெரிகிறோமா? என்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.