null
'இபிஎஸ்-க்கு தலைமைப் பண்பு இல்லை' என்ற ஓபிஎஸ்-ன் விமர்சனங்களுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
- எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது
- இபிஎஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தார்.
தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.
இதேபோன்று, மாநிலங்களவை உறுப்பினரான தம்பிதுரை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இபிஎஸ்க்கு தலைமைப் பண்பு இல்லை என்ற ஓபிஎஸ் விமர்சனங்களுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். அப்போது கட்சியின் எதிர்காலம், கட்சி தொடர்களின் எதிர்காலம் குறித்து ஓபிஎஸ்நினைத்து பார்த்திருந்தால் இந்த இயக்கத்திற்கு இவ்வளவு சோதனைகள் வந்திருக்காது. இபிஎஸ் அவர்களின் தலைமை பண்பை பேசுவதற்கு முன்பு ஓபிஎஸ் அவர்கள் தான் தலைமை பண்போடு இருக்கிறோமோ என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இபிஎஸ் அவர்களின் தலைமை பண்பை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு தான் முதலமைச்சராக முன்மொழிந்தார்கள். இபிஎஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இருந்தார். தற்போது ஓபிஎஸ் குற்றம் சாட்டுவது அவருடைய இயலாமையை தான் வெளிக்காட்டுகிறது" என்று தெரிவித்தார்.