பழனி மலைக்கோவிலில் புதுப்பிக்கப்பட்ட தங்கத் தொட்டில் அறை திறப்பு
- பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
- அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக பழனி மலை கோவில் தங்கரதம் நிலையம் அருகே தங்கத் தொட்டில் அறை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அறையை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 45 லட்சம் மதிப்பில் உபயதாரர் மூலம் புதுப்பிக்கும் பணியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற பிறகு இன்று காலை சிறப்பு பூஜையுடன் தங்கத் தொட்டில் அறை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், அன்னபூரணி மற்றும் பொறியாளர்கள் குமார், முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் தங்கத் தொட்டிலில் போடும் குழந்தைகளுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த குழந்தைக்கு 2 பஞ்சாமிர்த டப்பாக்காள், விபூதி, முருகன் படம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.