தமிழ்நாடு செய்திகள்

வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு- தமிழக அரசின் புதிய திட்டம் விரைவில் தொடக்கம்

Published On 2025-12-04 07:21 IST   |   Update On 2025-12-04 07:21:00 IST
  • பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.
  • குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது.

சென்னை:

தமிழ்நாடு முழுவதும் 590 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்து பரிமாற்றப்பதிவு, திருமணப்பதிவு, கடன் ஆவணங்கள் பதிவு, உயில், குடும்ப ஏற்பாடு (செட்டில்மென்ட்) உள்ளிட்ட பல ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பொதுவாக இதுபோன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பதிவு செய்த ஆவணங்களை பெற காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

இதனை தவிர்க்க பதிவுத்துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பதிவுத்துறை தலைவர் (ஐ.ஜி.) தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்பார்வையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மக்கள் எளிதாக பத்திரப்பதிவு செய்வதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தும் வகையில், இப்போது பதிவுத்துறை அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு சீர்திருத்தமாக 'ஸ்டார் 3.0' என்ற திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கான பத்திரப்பதிவு சேவைகள் விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப்பிரிவுகளை வாங்கவும், விற்கவும் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம்.

அதற்கான புதிய மென்பொருள் மூலம் சொத்துகளை வாங்குபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், விற்பவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும், சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்தால் போதும். மென்பொருளே தானாக பத்திரங்களை உருவாக்கிவிடும்.

பின்னர் ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், 'ஓ.டி.பி.' எண் கேட்கும். அதனையும் அதில் குறிப்பிட்டால், தொடர்ந்து விரல் ரேகைப்பதிவு செய்ய வேண்டும். இந்த விரல் ரேகைப் பதிவு செய்வதற்கான எந்திரங்கள் இப்போது கடைகளில் ரூ.1,500-க்கு கிடைக்கிறது. அதனை வாங்கி அதில் விரல் ரேகையை பதிவு செய்தால்போதும். அனைத்து பணிகளையும் இருந்த இடத்திலேயே செய்து முடித்துவிடலாம்.

இதற்காக செலவிடும் மொத்த நேரம் அதிகபட்சமாக 10 நிமிடம்தான். அதற்குள் நம்முடைய கையில் பத்திரப் பதிவு செய்ததற்கான ஆவணங்களும் கிடைத்துவிடும். இதன் மூலம் இனி அலைய வேண்டிய நிலையும், காத்திருக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கு நிச்சயம் இருக்காது.

இதுமட்டுமா? ஆவணங்களின் நகல் பெறுவதற்கு இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் நிலைமை இனி இல்லாத சூழ்நிலையை பதிவுத்துறை மேற்கொள்ள இருக்கிறது.

தற்போது ஆன்லைன் மூலமாக ஆவணங்களின் நகல் பெற பதிவு செய்யும்போது, சார் பதிவாளர் 'லாக்கினு'க்கு அந்த அனுமதிப்பதிவு சென்று, அதனை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

அவ்வாறான நகலை பெறுவதற்கு குறைந்தது 2 நாட்களோ அல்லது ஒரு வாரமோ காலம் எடுக்கும். அதனையும் தவிர்க்கும் நோக்கில், ''சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்'' என்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடங்களிலேயே அந்த ஆவணங்களின் சான்றிட்ட நகல் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்களை பதிவு செய்வதற்கும் ஒரு புதுமையான மென்பொருளை பதிவுத்துறை வடிவமைத்து இருக்கிறது. இந்த சங்கங்களை பதிவு செய்ய இப்போது நேரடியாக அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு காணப்பட்டு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே அதற்கான பதிவுகளை மேற்கொண்டு, ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வீட்டு வசதி வாரிய அலுவலகத்திலேயே பதிவுசெய்து கையில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்ற பல்வேறு சேவைகளை பதிவுத் துறை 'ஸ்டார் 3.0' என்ற திட்டத்தின் கீழ் இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்க இருக்கிறார்.

Tags:    

Similar News