திருமங்கலம் அம்மா கோவிலில் வருகிற 1-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பயணம் தொடங்குகிறார்: ஆர்.பி.உதயகுமார்
- மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தமிழக முழுவதும் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
- வாக்காள பெருமக்கள் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும்.
மதுரை:
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கிய அவர் தற்போது வரை 3 கட்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ள அவர் தனது 4-ம் கட்ட பயணத்தை வருகிற 1-ந்தேதி மதுரையில் தொடங்குகிறார்.
மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம், பந்தல்குடி கண்மாய் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவர் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தமிழக முழுவதும் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில் இந்த பயணம் உள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரைக்கு, முருகப்பெருமான் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், கடைசி படை வீடான பழமுதிர்ச்சோலை, உலகப் பிரசித்தி பெற்ற சித்திரத் திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மக்களுக்கு வரமளிக்கும் உலகப்பிரசித்தி பெற்ற நம் மாமதுரைக்கு எடப்பாடியார் வருகை தருகிறார்.
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீரை நிரப்பி மக்களின் மனதை குளிர வைத்தும், வைகை நதியை பாதுகாத்தும், உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தனது பொற்கரங்களால் துவக்கி வைத்தும், மதுரை மக்களுக்கு திட்டங்களை வாரி வாரி வழங்கி அன்பும், உழைப்பும், கருணையின் அடையாளமாக திகழும் எடப்பாடியாரை மக்கள் வரவேற்க தயாராகி விட்டனர்.
கொரோனா காலத்தில் ஆல் பாஸ் வழங்கிய ஆல் பாஸ் முதல்வர், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய சமூக நீதிக் காவலர் எடப்பாடியார் வருகின்ற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மதுரை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார்.
குறிப்பாக வருகின்ற ஒன்றாம் தேதி திருமங்கலம் தொகுதியில் உள்ள அம்மா கோவிலில் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் போது அவரை வரவேற்க தங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எடப்பாடியாருக்கு முளைப்பாரி வைத்து தாய்மார்களும், விவசாய மக்களுக்கு திட்டங்களை வாரி வழங்கிய எடப்பாடியாருக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் கிராமிய, கலாச்சாரமிக்க எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்க விவசாய மக்களும், மாணவர்கள், இளைஞர்கள் என திரண்டு எடப்பாடியாரை வரவேற்க தயாராகி விட்டனர்.
மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அனைவரும் சூளுரை ஏற்க தயாராகி விட்டார்கள். ஆகவே திருமங்கலம் தொகுதி எழுச்சி பயணம் வரலாறு படைக்கப் போகிறது. வாக்காள பெருமக்கள் அனைவரும் அணி திரண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.