தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: அவர்களை எய்தவர்களை கண்டுபிடித்து விட்டார்களா? - ராமதாஸ் கேள்வி

Published On 2025-07-03 12:50 IST   |   Update On 2025-07-03 17:00:00 IST
  • பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவல் வேதனை அளிக்கிறது.
  • பட்டாசு ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

திண்டிவனம்:

பா.ம.க.வில் நிறுவன தலைவர் ராமதாசுக்கும், அவரது அன்புமணிக்கு இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரிடமும் கட்சி நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அன்புமணி பா.ம.க. சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது பா.ம.க.வில் முழு அதிகாரம் எனக்கே உள்ளது. டாக்டர் ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அவரை யாரும் விமர்ச்சிகாதீர்கள் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் சேலம் மாநகர மாவட்ட பா.ம.க. செயலாளராக இருந்த அருள் எம்.எல்.ஏ.வை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கி அன்புமணி உத்தரவிட்டார்.

இதற்கு அருள் எம்.எல்.ஏ. பதிலடி கொடுத்துள்ளார். என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது. ராமதாசின் நியமனம் மட்டுமே பா.ம.க. வில் செல்லும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கிலத் திறனை வளர்க்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தை வரவேற்கிறேன். இது பாராட்டுக்குரியது. இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இது அபாயகரமானது. இதனை அரசு கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருட்டு புகாரில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இளைஞரை அடித்து கொலை செய்த போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். அவர்களை எய்தவர்களை கண்டுபிடித்து விட்டார்களா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்தரவின் பேரில் இளைஞரின் வாழ்க்கை முடிந்துள்ளது. அப்படியானால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன?

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவல் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும். தலைநகர் சென்னை மோசமான சாலைகள் கொண்டுள்ளது. மெட்ரோ ரெயில் மற்றும் மேம்பால பணிகளால் நெடுஞ்சாலைகள் அனைத்தும் தனது அடையாளங்களை இழந்துள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது குறித்து பொதுக்குழு, செயற்குழு, நிர்வாக குழு தான் முடிவு எடுக்கும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

Full View

பா.ம.க. எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது. சட்டமன்ற கொறடாவான அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றால், ஜி.கே.மணி மூலம் சபாநாயகர்களிடம் தகவல் தெரிவித்து பின்னர் என்னுடைய அனுமதியுடன் தான் நீக்க முடியும். பா.ம.க. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருளுக்கு உயர்மட்ட குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் அன்புமணி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம். அதற்கு என்னிடம் பதில் இல்லை என்றார்.

Tags:    

Similar News