பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டுபிடிப்போருக்கு ரூ.100 பரிசு - ராமதாஸ் அறிவிப்பு
- 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
- 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.
தைலாபுரம்:
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.
இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.
பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.