வடதமிழ்நாட்டில் வன்னியர் ஆதரவை திரட்ட ராமதாஸ் அதிரடி திட்டம்
- பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
- அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.
சென்னை:
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.
பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.
இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.