நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
- நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. வெயில் தலைகாட்டவில்லை. இந்நிலையில் மாலையில் திடீரென மாநகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மின்னலும் பலமாக இருந்தது.
வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கொக்கிரகுளம் பழைய ஆற்றுப்பாலம், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் பெருமாள்புரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
சுமார் 2 மணி நேரம் டவுன் பகுதியில் பெய்த கனமழையால் டவுன் வ.உ.சி. தெருவில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி கிடந்தது. ஏற்கனவே வாறுகால் அடைப்புகளால் சாக்கடை நிரம்பிய நிலையில் இரவு முழுவதும் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து செல்வதற்கு வழியின்றி தேங்கியது. அதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் தலா 3 சென்டிமீட்டர் மழை கொட்டியது.
நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பகலில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 3½ சென்டி மீட்டர் மழை பதிவாகியது. அம்பையில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 109 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 98½ அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 116 அடியாகவும் இருக்கிறது. 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணையில் 45 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 67¾ அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 60 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130½ அடியாக வும் உள்ளது.
நகர் பகுதிகளை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியான சிவகிரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான நிலை அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.
அதிகபட்சமாக சிவகிரியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதலே புளியங்குடி, சிவகிரி, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், கழுகு மலை, திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. காடல்குடி, வைப்பார், சூரங்குடியில் பெய்த பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.