தமிழ்நாடு செய்திகள்

கோழிப்பண்ணையில் தீ விபத்து- 2 ஆயிரம் நாட்டு கோழிகள் கருகி உயிரிழப்பு

Published On 2024-12-07 10:24 IST   |   Update On 2024-12-07 10:24:00 IST
  • தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர் அருணகிரிபாளையம் ஊஞ்சல்கொடை தோட்டம் என்ற இடத்தில் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை வைத்து அதில் சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் ஆடுகளுக்கு விறகு அடுப்பில் கூழ் காய்ச்சினார். பின்னர் அடுப்பை அணைக்காமல் கந்தம்பாளையத்தில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் இருந்த நாட்டுக்கோழிகள் இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைக்கு பரவியது. இதில் தீப்பிடித்து நாட்டுக்கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் திருச்செங்கோடு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் நாட்டுக்கோழி பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி எரிந்து இறந்து போனது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News