தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மாநகர பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்.

அடுத்த பூத் கமிட்டி கூட்டத்திற்காக விஜய்க்கு அழைப்பு விடுத்து த.வெ.க.வினர் ஒட்டிய போஸ்டர்கள்

Published On 2025-04-30 14:06 IST   |   Update On 2025-04-30 14:06:00 IST
  • விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
  • பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இதற்காக கட்சி தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கடந்த 26,27-ந்தேதிகளில் கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கு பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 4 மண்டலங்களிலும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பூத் கமிட்டி கூட்டத்தை நெல்லையில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி தலைமைக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் விஜய்யை நெல்லைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இன்று நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

நெல்லை மாநகரப் பகுதியான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், களமும் நமதே.. இனிவரும் காலமும் நமதே.. விஜய் அவர்களே நெல்லை சீமை உங்களை அன்போடு அழைக்கிறது என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் உள்ளது. விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும் அந்த போஸ்டர்களில் விஜய்யை வாழ்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News