தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு - கருணாஸ்

Published On 2025-05-13 20:27 IST   |   Update On 2025-05-13 20:27:00 IST
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
  • குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் வரவேற்றுள்ளார்.

இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ், "அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டார்கள். இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நடந்த அருவருப்பான செயல். இதில் அவரது கட்சிக்காரர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கின் விசாரணையை நடத்தாமல் முடக்கி வைத்திருந்தனர்.

இன்று மக்கள் சட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னை பொறுத்தவரை பொள்ளாச்சி வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News